ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் கோவில் தேர் இழுக்க வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு

Published On 2021-03-27 08:06 GMT   |   Update On 2021-03-27 08:06 GMT
திருப்பரங்குன்றம் கோவில் தேர் இழுக்க பாரம்பரிய பழக்க வழக்கப்படி கிராமம், கிராமமாக வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை தொடர்ந்து திருவிழா நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஏப்ரல் 1-ந்தேதி 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, மகா தேரோட்டம் நடக்கிறது.

இதையொட்டி கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேரை 6 அடுக்குகளாக அலங்கரித்தல், தேரினை இழுத்து செல்வது போல மரத்திலான 4 குதிரைகள் பொருத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று கோவில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் தலைமையில் நாட்டாமை வைராவி, காவல் மிராசு, மற்றும் கோவில் பணியாளர்கள் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, வடிவேல்கரை விளாச்சேரி, தனக்கன்குளம், தோப்பூர், நிலையூர், கூத்தியார்குண்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று நாட்டாமை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வெற்றிலை, பாக்கு மற்றும் பங்குனிப் பெருவிழாவின் அழைப்பிதழை தாம்பூலத்தில் வைத்து பாரம்பரிய வழக்கப்படி அழைப்பு விடுத்தனர்.

கொரோனா பரவலின் காரணமாக கோவில் தேர் இழுக்க பக்தர்கள் வரும்போது முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இது தொடர்பாக அழைப்பு பெற்ற முக்கிய பிரமுகர்கள் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு தேரை அரிச்சந்திர மகாராஜா வழங்கியதாக செவிவழி செய்தி கூறுகிறது. பழங்காலத்தில் மரத்திலான சக்கரங்கள் பொருத்தப்பட்டது. தேரில் எண்ணற்ற சிற்பங்கள் இருந்தாலும் முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக "தராசு" பிடித்தப்படி அமைந்துள்ள சிற்பமானது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அதாவது நீதி நேர்மையை நிலைநாட்டக் கூடிய தராசுக்கார பூமியாக திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. நீதி, நேர்மை தவறி நடந்தால் தராசு போல எடை போட்டு உரியவர் தண்டிக்கப்படுவர் என்று அந்த சிற்பம் உணர்த்துகிறது. இதே சமயம் முருகப்பெருமானுக்கு துலாம் ராசி (தராசு) என்பதையும் அந்த சிற்பம் உணர்த்துவதாக சொல்லப் படுகிறது. மரத்தில் ஆன சக்கரங்கள் கொண்ட தேரானது காலத்திற்கேற்ப இரும்பு சக்கர பட்டயம் மற்றும் ஹைட்ராலிக் எனும் பிரேக் பொருத்தப்பட்டு கம்ப்யூட்டர் யுகத்திற்கு மாறிய போதிலும் பாரம்பரிய பழக்கவழக்கத்தின்படி தேர் இழுக்க அழைப்பு விடுத்து மரியாதை செய்வது இன்றும் தொன்று தொட்டு தொடர்கிறது.

மேலும் தேர் இழுக்கப்பட்டு நிலைக்கு வந்ததும் நாட்டாண்மை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சோற்று பொட்டலங்கள் வழங்கப்படும். பின்னர் மாலையில் தேருக்கு முன்பாக முருகப்பெருமான் அருள் பார்வையில் பரிவட்ட மரியாதை கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News