செய்திகள்
கோப்பு படம்

தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயம்- சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-12-12 00:32 GMT   |   Update On 2020-12-12 00:32 GMT
சென்னை தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக கூறி, சி.பி.ஐ. 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

பின்னர் அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. அந்த தங்கத்தை அந்த தனியார் நிறுவன அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்த லாக்கருக்கான 72 சாவிகளை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

பின்னர், இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் கைவிட்டு, முடித்து வைத்தனர். ஆனால், இந்த தங்கத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக கொள்கை விதிகள் மீறப்பட்டுள்ளது என்று கூறி, அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கிற்கு இந்த தங்கத்தை பறிமுதல் செய்ததாக கணக்கு காட்டி, முறையாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிலும் அனுமதி பெற்றனர்.

இவ்வாறு சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்ட பல கட்ட விசாரணையின் இறுதியில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குனர் ஜெனரலிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சிறப்பு கோர்ட்டிலும் உத்தரவு பெறப்பட்டது. இதற்கிடையில், இந்த தங்கத்தை இறக்குமதி செய்த நிறுவனம் பல வங்கிகளில் ரூ.1,160 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த தனியார் தங்க இறக்குமதி நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி நிர்வகிக்க வங்கிகள் சார்பில் சிறப்பு அதிகாரியாக ராமசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்த அதிகாரி இந்த தங்கத்தை கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணையில் அனைத்து தரப்பு சமரசத்தின் அடிப்படையில், வங்கி சிறப்பு அதிகாரியிடம் தங்கத்தை ஒப்படைக்க சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் தனியார் அலுவலகத்தை திறந்து 72 சாவிகளை பயன்படுத்தி அந்த லாக்கரை திறந்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் குறைவாக இருந்தது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கத்தை தனியார் நிறுவனத்தில் உள்ள தராசு மூலம் எடை போட்டனர். அதில் எடை அதிகமாக காட்டியிருக்கலாம். தற்போது வேறு தராசு மூலம் எடை பார்க்கும்போது, வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வக்கீல் சீனிவாசன் வாதிட்டார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். “மாயமானது ஒரு சவரனோ 2 சவரனோ இல்லை. சுமார் 100 கிலோ தங்கம் மாயமாகி உள்ளது. இதை சாதாரணமாக விட முடியாது. ஒருவேளை இந்த தங்கம் சிறப்பு கோர்ட்டு நீதிபதி கட்டுப்பாட்டில் மாயமாகி இருந்தால், நீதிபதி, கோர்ட்டு ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவதோடு அவர்கள் மீது திருட்டு வழக்கு வேறு பதிவு செய்திருப்பார்கள்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும். எனவே, மாயமான 100 கிலோ தங்கம் குறித்து வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை நடத்த உத்தரவிட போகிறேன். ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகள் புலன்விசாரணையில் முதன்மையானவர்கள், அவர்கள் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? என்று வாதம் செய்யப்பட்டது. இதை ஏற்க முடியாது, சி.பி.ஐ.க்கு மட்டும் கொம்புகள் உள்ளது. மாநில போலீசாருக்கு வால் மட்டும் உள்ளது என்று கூற முடியாது. மேலும், டெல்லி போலீஸ் சட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.ஐ. அமைப்பால் திருட்டு வழக்கு பதிவு செய்ய முடியாது. எனவே, தங்கம் மாயமானது குறித்து வங்கிகளின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்யவேண்டும். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத அதிகாரி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவரது புலன் விசாரணைக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்குப்பதிவு செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Tags:    

Similar News