செய்திகள்
குமாரசாமி

மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது: குமாரசாமி

Published On 2021-01-05 01:53 GMT   |   Update On 2021-01-05 01:53 GMT
மத சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பெரிய படையே உள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) தனித்து போட்டியிடும். எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் நோக்கம் என்ன என்பது எனக்கு தெரியும். இந்த 2 கட்சிகளும், ஜனதா தளம் (எஸ்) கட்சி பலம் இழந்துவிட்டதாக தவறான பிரசாரம் செய்து வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது.

காங்கிரஸ் ஆதரவால் தான் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த தேவகவுடா பிரதமராகவும், குமாரசாமி முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தனர் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். நாங்கள் பதவி கேட்டு காங்கிரசாரிடம் செல்லவில்லை. காங்கிரசாரின் வீட்டு வாசலுக்கு நாங்கள் எப்போதும் சென்றது இல்லை. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காங்கிரசை நான் குறை கூறவில்லை.

தற்போது உள்ள காங்கிரஸ் தலைவர்களை தான் விமர்சித்தேன். டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரால் நான் முதல்-மந்திரி ஆகவில்லை. கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பு பா.ஜனதாவினர் கிராம சுவராஜ்ஜிய மாநாடுகளை நடத்தினர். பண பலத்தால் அக்கட்சியினர் தேர்தலை சந்தித்தனர். எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களின் தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசவே முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து பேசினேன்.

எடியூரப்பாவை சந்தித்தபோது அரசியல் ரீதியாக நான் எதுவும் பேசவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு பெரிய படையே உள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலில் எங்கள் கட்சியின் பலம் என்ன என்பது வெளிப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலில் தங்கள் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு கூற மாட்டோம்.

சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு ஜனதா தளம் (எஸ்) கட்சியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறோம். தேவகவுடா கர்நாடகத்தை விட்டு டெல்லிக்கு செல்ல மாட்டார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

Similar News