உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா?: ஐகோர்ட்டில் 2-வது நாளாக விசாரணை

Published On 2022-01-25 09:27 GMT   |   Update On 2022-01-25 10:22 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரியும், கால அவகாசம் கோரியும் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு இருப்பதால் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர் நக்கீரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக்கையுடன் டாக்டர் பாண்டியராஜ் உள்பட மேலும் பலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ் வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டது.

அப்போது ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தது போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடைபிடித்து தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்று முதல் நேரடியாக நடைபெற்று வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, 5 மாநில சட்டசபை தேர்தலே நடைபெறும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

இந்த வழக்கு இன்று 2-வது நாளாக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் வாதாடுகையில், ‘‘தமிழகத்தில் ஏற்கனவே சுமார் 28 ஆயிரம் தெருக்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் எப்படி தேர்தலில் வாக்களிக்க முடியும். எப்படி போட்டியிடுவார்கள்’’ என்று வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “அவ்வாறு பாதிக்கப்படும் பொதுமக்கள் ஐகோர்ட்டை அணுகலாம். இதுபோன்ற பொது நல வழக்குகளை தொடர்ந்து அணுக முடியாது.

தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றும் அதிகமாக உள்ளன. எனவே இதுபோன்ற காரணங்களுக்காக தேர்தலை தள்ளி வைக்க எங்களால் உத்தரவிட முடியாது” என்றனர்.

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சுந்தரேசன், ‘‘சட்டசபை தேர்தலுக்கும், உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பில் போட்டியிடுபவர்கள் வீடு வீடாக சென்று தனிப்பட்ட முறையில் பிரசாரம் செய்வார்கள். இதனால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’’ என்று வாதிட்டார்.

மற்றொரு மனுதாரரின் வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடும்போது, “சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசு நடவடிக்கை எடுக்கிறது. தற்போது நோய் தொற்று அதிகம் உள்ளதால் தேர்தலை தள்ளி வைக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது” என்றார். இந்த வாதங்களை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை சேர்ந்த எஸ்.சங்கர் சார்பில் வக்கீல் இந்திரா இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி கடந்த செப்டம்பர் 27-ல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த காலக்கெடு வருகிற 27-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க கோரி சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பிலும் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டபோது, ‘‘இன்று மாலை முடிவு செய்வோம்’’ என்று தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு வருகிற 27-ந்தேதி முடிவடையும் நிலையில் தேர்தலை தள்ளி வைக்க கோரியும், கால அவகாசம் கோரியும் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.



Tags:    

Similar News