செய்திகள்
மேரி கோம்

ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி

Published On 2021-03-03 10:58 GMT   |   Update On 2021-03-03 10:58 GMT
ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 37), சர்வதேச அரங்கில் தொடர் பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இது அவர் பங்கேற்கும் இரண்டாவது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டி ஆகும்.

இந்நிலையில், சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் தங்கள் அனுபவங்களை மற்ற வீரர்களுக்கு பகிர்ந்து கொள்வதுடன், குத்துச்சண்டையை பிரபலப்படுத்தும் வகையிலும், ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் இயக்குனர் குழு அளித்த ஓட்டுகளின் அடிப்படையில் மேரி கோம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் தேர்வு தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

மேரி கோம் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளார். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சாம்பியன்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கமிட்டியின் தலைவர் பொறுப்பை வழங்கியமைக்காக, சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைவர் உமர் கிரெம்லெவ் மற்றும் குத்துச்சண்டை குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மேரி கோம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

மேலும், சர்வதேச குத்துச்சண்டை சங்க மேம்பாட்டிற்காக தனது சிறந்த பங்களிப்பை வழங்க உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார் மேரி கோம்.

Tags:    

Similar News