செய்திகள்
பாஜக

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகிறது பா.ஜனதா

Published On 2021-06-25 10:39 GMT   |   Update On 2021-06-25 10:39 GMT
கடந்த காலங்களில் உள்ளாட்சி தேர்தலில் செல்வாக்குள்ள பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக பலர் வெற்றி பெற்றனர்.
சென்னை:

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற செப்டம்பர் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

தமிழக பா.ஜனதா செயற்குழு கூட்டம் கமலாலயத்தில் இன்று நடந்தது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். மேலிட பார்வையாளர்கள் சி.டி.ரவி, சுதாகர்ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் மாநில நிர்வாகிகள் நரேந்திரன், சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, வானதிசீனிவாசன், சரஸ்வதி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, செயல்பாடு மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றி விவாதித்தனர்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்று இருந்தது. 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த காலங்களில் உள்ளாட்சி தேர்தலில் செல்வாக்குள்ள பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக பலர் வெற்றி பெற்றனர்.

உள்ளாட்சிகளை பொறுத்தவரை உள்ளூர் செல்வாக்குதான் கட்சிகளுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும். எனவே வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளில் தனித்தே போட்டியிடலாம் என்றும் சிலர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே பா.ஜனதா அ.திமு.க.வுடனான கூட்டணி தொடருமா? தனித்து களம் இறங்குமா? என்பது தெரியவில்லை.

தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களிலும் ஊராட்சி அளவில் பா.ஜனதா செல்வாக்கு எப்படி உள்ளது. முந்தைய தேர்தல்களில் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்களா? என்பது போன்ற விபரங்களை மேலிட பொறுப்பாளர்கள் கேட்டறிந்தனர்.

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் செல்வாக்கு மிகுந்த நிர்வாகிகள் பெயர் விவரங்களையும் தயார் செய்யும்படி அந்தந்த மாவட்ட தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News