தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10 ரென்டர் - கோப்புப்படம்

கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி அறிவிப்பு

Published On 2019-07-02 05:22 GMT   |   Update On 2019-07-02 05:22 GMT
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



சாம்சங் நிறுவனம் 2019 கேலக்ஸி அன்பேக்டு விழா ஆகஸ்டு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெறும் என அறிவித்துள்ளது. இவ்விழாவில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக தேதியை புதிய டீசர் மூலம் சாம்சங் தெரிவித்துள்ளது. 

அதிகாரப்பூர்வ டீசரில் எஸ் பென், கேமராவினை வரையும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா, திரையின் நடுவே வழங்கப்படுவதை உணர்த்துகிறது. கேலக்ஸி பிரிவு சாதனங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது. இதனால் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பல்வேறு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்: 6.25 இன்ச் ஸ்கிரீன், 6.75 இன்ச் ஸ்கிரீன் கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் மற்றும் பெரிய திரை கொண்ட கேலக்ஸி நோட் 10 5ஜி வேரியண்ட் என மூன்று வெர்ஷன்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.



சமீபத்தில் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது. இதில் புதிய ஸ்மார்ட்போன் மெல்லிய பெசல்கள் மற்றும் பன்ச் ஹோல் ஸ்கிரீன் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 8 என்.எம். எக்சைனோஸ் 9820 அல்லது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், நோட் 10 மாடலில் மூன்று பிரைமரி கேமரா சென்சார், நோட் 10 பிளஸ் மாடலில் நான்கு கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் கேமராக்களில் வேரியபிள் அப்ரேச்சர் (F1.5/F1.8/F2.4) வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு, கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் மட்டும் மெமரி கார்டு ஸ்லாட் வழங்கப்படலாம். நோட் 10 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், நோட் 10 பிளஸ் மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News