செய்திகள்
கோப்புபடம்

ஆவின் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை - பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி

Published On 2021-06-06 12:32 GMT   |   Update On 2021-06-06 12:32 GMT
தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய வளாகத்ததில் உள்ள அதி நவீன பாலகத்தினை இன்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய வளாகத்ததில் உள்ள அதி நவீன பாலகத்தினை இன்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். பின்னர் ரெலடி ராணுவத்தினர் மாளிகையில் உள்ள ஆவின் பாலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ஆவின் பால் விலை குறைப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனடிப்படையில் இன்று உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதலாக 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதுபோல் விற்பனையும் 4 லட்சம் லிட்டர் பால் அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 12 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படும். தற்போது இது 15 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் பால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சியில் லிட்டருக்கு ரூ.6 விலை அதிகரித்த போது தனியார் பால் விலையை உயர்த்தி அறிவித்தார்கள். ஆனால் தற்போது ஆவின் மட்டும்தான் குறைத்துள்ளது. மற்ற பால் விலை குறைக்கப்படவில்லை.

பால் விலை குறைக்கப்பட்டது மூலம் தற்போது ரூ.2700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கொள்முதல் விலையை இப்போது உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆவின் பால் விற்பனை நிலையத்தில் ஆவின் பொருட்கள் தவிர வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது நான் ஆய்வு செய்த போது கூட ஒரு கடையில் வேறு பொருட்கள் விலை பட்டியல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை உடனடியாக அகற்றுமாறு கூறியுள்ளேன்.

தற்போது 26 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் வரை காலியாக உள்ளது. கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் வகையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்.

ஆவின் நிறுவனத்தில் 152 பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆவின் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இதேப்போல் கிழக்காசிய நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கும் ஆவின்பால் அனுப்புவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே அந்த நாடுகளுக்கு சென்றது. கடந்த ஆட்சியில் அது தடைபட்டது. அதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரகேசரன், டி.கே.ஜி.நீலமேகம், பெற்றோர் ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News