செய்திகள்
கொரோனா தடுப்பூசி

சத்தீஸ்கரில் கோவேக்சின் தடுப்பூசி மருந்தை அனுமதிக்க மாட்டோம்- மாநில அரசு அறிவிப்பு

Published On 2021-01-11 06:27 GMT   |   Update On 2021-01-11 06:27 GMT
சத்தீஸ்கர் மாநிலம் கோவேக்சின் மருந்தை அந்த மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராய்ப்பூர்:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 16-ந் தேதி தொடங்குகிறது.

தற்போது ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசியை போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே சத்தீஸ்கர் மாநிலம் கோவேக்சின் மருந்தை அந்த மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில சுகாதார மந்திரி டி.எஸ்.சிங் தியோ கூறியதாவது:-

கோவேக்சின் மருந்தின் சோதனை இன்னும் முழுமையாக முடியவில்லை. அதன் 3-வது கட்ட பரிசோதனை முடிந்து அதனுடைய திறன் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். அதன் பிறகுதான் அது முழுமையடையும்.

ஆனால் 3-வது கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பே இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இதை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். மாநில மக்களும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மருந்தின் இறுதி சோதனை முடிவதற்கு முன்பாக அதை பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு ஏன் அனுமதிக்க வேண்டும்? இவ்வாறு ஒரு நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தால், மற்ற நிறுவனங்களும் தங்கள் ஆய்வின் இறுதி முடிவு வருவதற்கு முன்பாக அனுமதி கேட்கும் நிலை ஏற்படும்.

மனிதர்கள் வாழ்க்கையில் நாம் அலட்சியமாக நடந்து கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலம் தான் முதலாவதாக கோவேக்சின் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதே போல மற்ற மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தால், அது சிக்கலை உருவாக்கும்.

ஏற்கனவே கோவேக்சின் மருந்தின் திறன் குறித்து அதன் போட்டி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் அதிருப்தி தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் ஒரு மாநில அரசே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

Tags:    

Similar News