செய்திகள்
மஞ்சள்

ஈரோடு மார்க்கெட்டுக்கு புதுமஞ்சள் வரத்து தொடங்கியது

Published On 2021-02-16 10:42 GMT   |   Update On 2021-02-16 10:42 GMT
ஈரோடு மார்க்கெட்டுக்கு புது மஞ்சள் வரத்து தொடங்கியது.
ஈரோடு:

ஈரோட்டில் மஞ்சள் ஏலம் 4 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. உரிய விலை கிடைக்காததால் மஞ்சளை விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். இந்தநிலையில் மஞ்சளின் ஏற்றுமதி கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 40 சதவீதம் உயர்ந்து உள்ளது. இதனால் தரமான மஞ்சளுக்கு வரவேற்பு கிடைத்து உள்ளது. விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.

மஞ்சள் விலை உயர்ந்து இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் தங்களது மஞ்சளை சற்று அதிகமாக கொண்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு புது மஞ்சள் வரத்தும் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.சத்தியமூர்த்தி கூறியதாவது:-

ஈரோடு மஞ்சள் வளாகத்தில் உள்ள ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து புது மஞ்சள் 500 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. இதேபோல் பழைய மஞ்சள் 1,500 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன. இதில் பழைய விரலி மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 414 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 569 வரையும், புதிய விரலி மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 209 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 699 வரையும் விற்பனை ஆனது.

பருவமழை பெய்ததன் காரணமாக அறுவடை பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால், இந்த ஆண்டு புதிய மஞ்சள் வரத்து குறைவாக உள்ளது. அதேசமயம் ஏற்றுமதி அதிகமாக இருப்பதால் மஞ்சளின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தை காட்டிலும், ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளில் ரூ.200 முதல் ரூ.300 வரை விலை உயர்ந்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதால் ஈரோடு சந்தைக்கு தினமும் சுமார் 200 மூட்டைகள் மஞ்சள் வரத்து ஏற்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அறுவடை பணிகள் முடிவு பெற வாய்ப்புள்ளதால், மஞ்சளின் வரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து நேரடியாக வங்காளதேசத்துக்கு கிசான் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சரக்கு ரெயிலில் விவசாய விளை பொருட்கள் குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்ல முடிகிறது. அதில் மஞ்சளும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே மஞ்சளின் நுகர்வு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News