உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 500 பேருக்கு மேல் கொரோனா

Published On 2022-01-26 09:37 GMT   |   Update On 2022-01-26 09:37 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லையில் இன்று 500-க்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தைப் பொறுத்தவரை ராதாபுரம், வள்ளியூர், அம்பை உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணமாகவே உள்ளது.

இன்றைய பாதிப்பில் நெல்லை மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் ஒரு டாக்டர், வன்னிக்கோனேந்தல், பேட்டை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் இரண்டு டாக்டர்கள், சாந்தி நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் ஒருவர் ஆகியோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகளவிலான பாதிப்பு உள்ளவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாநகர பகுதியில் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் தூவினர்.
இதற்கிடையே மாநகர பகுதிகளில் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடை பிடிக்காமல் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியமாகவே சுற்றித்திரிந்து வருகின்றனர்.

இதனால் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மேற்பார் வையில் 4 மண்டலங்களிலும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தச்சை மண்டலத்தில் மட்டும் சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தலைமையில் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு ரூ.5000, முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 என இந்த மாதம் 1-ம் தேதியில் இருந்து இன்று வரை சுமார் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News