செய்திகள்
இண்டேன் கியாஸ் சேமிப்பு கிடங்கில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள கியாஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி

இண்டேன் கியாஸ் சேமிப்பு வளாகத்தில் கூடுதலாக 1,800 டன் கொள்ளளவில் புதிய கிடங்கு - தலைமை மேலாளர் தகவல்

Published On 2021-01-10 10:41 GMT   |   Update On 2021-01-10 10:41 GMT
பெருந்துறையில் உள்ள இண்டேன் கியாஸ் சேமிப்பு வளாகத்தில் கூடுதலாக 1,800 டன் கியாஸ் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கு கட்டப்படுகிறது என தலைமை மேலாளர் ஆர்.தாமரைச்செல்வன் கூறினார்.
ஈரோடு:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இண்டேன் சமையல் கியாஸ் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு இண்டேன் கியாஸ் நிறுவன வாடிக்கையாளர் தினத்தையொட்டி நேற்று தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு இண்டேன் கியாஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை தலைமை மேலாளர் ஆர்.தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் கிரீஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் போது, கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளில் இருந்து சேமிப்பு கிடங்கில் உள்ள கலன்களுக்கு கியாஸ் செலுத்தும் போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை உடனடியாக அணைத்து சேதத்தில் இருந்து தப்பிப்பது குறித்த தீ விபத்து தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கியாஸ் ஆலை பாதுகாப்பு அதிகாரி சரத் தலைமையில் பணியாளர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காட்டினார்கள்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய தலைமை மேலாளர் ஆர்.தாமரைச்செல்வன் கூறியதாவது:-

சமையல் கியாஸ் விற்பனை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சமையல் கியாஸ் நிறுவனம் உள்ளது. இந்தியா முழுவதும் 12 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 கோடியே 60 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது தமிழக எண்ணிக்கையில் 57.7 சதவீதமாகும்.

ஈரோடு இண்டேன் கியாஸ் சிலிண்டர் ஆலை பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. சுமார் 61 ஏக்கர் பரப்பளவில் ஆலை உள்ளது. இதில் சுமார் 30 ஏக்கர் அளவுக்கு ஆலையும் 30 ஏக்கர் அளவுக்கு பசுமைக்காடும் உள்ளது. பெருந்துறையில் இருந்து ஈரோடு நாமக்கல் மாவட்டங்கள் முழுமையும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறது. 125 முகவர்கள் சிலிண்டர் வினியோக பணியில் உள்ளனர். இங்கிருந்து தினசரி 32 ஆயிரம் முதல் 38 ஆயிரம் வரை சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இங்கு 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை தினசரி வினியோகம் செய்யும் வசதி இருக்கிறது. சுமார் 10 ஆயிரம் புதிய சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 37 ஆயிரம் இண்டேன் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இதுதவிர 5 கிலோ கியாஸ் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிலிண்டர்களை பொதுமக்கள் உடனடியாக வாங்கிக்கொள்ளும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக உபயோகத்துக்கும் இந்த சிலிண்டர்கள் கிடைக்கும்.

வர்த்தக உபயோகத்துக்கு 19 கிலோ மற்றும் 47.5 கிலோ சிலிண்டர்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. 19 கிலோ சிலிண்டரில் கியாஸ் பயன்பாட்டு நாட்களை அதிகரிக்கும் வகையில் எக்ஸ்ட்ரா தேஜ் என்ற புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக ஆதரவை பெற்று இருக்கிறது.

பெருந்துறை கியாஸ் சேமிப்பு கிடங்கில் ஏற்கனவே 1,400 டன் மற்றும் 450 டன் கொள்ளளவு கொண்ட 2 கலன்கள் உள்ளன. இதன் மூலம் எப்போதும் 1,850 டன் கியாஸ் இருப்பில் வைக்கப்பட்டு இருக்கும். காரணம், சென்னை எண்ணூர் துறைமுகம் மற்றும் மங்களூரில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தினசரி கியாஸ் எடுத்து வரப்படுகிறது. ஏதேனும் தடங்கல்கள் காரணமாக கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு விடாமல் இருக்க இங்கு சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கொள்ளளவை உயர்த்தும் வகையில் கூடுதலாக 1,800 டன் கொள்ளளவு கொண்ட புதிய கொள்கலன் கட்டும் பணி நடந்து வருகிறது. பணிகள் முழுமை பெற்று இந்த மாதம் (ஜனவரி) இறுதி அல்லது பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும். இந்த கிடங்கு செயல்பட தொடங்கிய பின்னர் 6 நாட்களுக்கு தேவையான கியாஸ் சேமிப்பில் இருக்கும்.

தற்போது 24 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறோம். இன்னும் இந்த கால அளவை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

5 கிலோ, 14.2 கிலோ அளவுகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள், 19 கிலோ, 47.5 கிலோ சிலிண்டர்களும் உடனடியாக கிடைக்கிறது. விரைவில் 425 கிலோ சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழில் கூட பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடுகளில் இருந்து எடுத்து வரப்படும் சிலிண்டர்கள் சுத்தம் செய்வது, அவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா என்று சோதனை செய்தல், ஒரே நேரத்தில் 24 சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்பும் எந்திரத்தின் செயல்பாடு, கசிவு சோதனையிடும் தானியங்கி எந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டனர். கியாஸ் நிரப்பிய சிலிண்டர்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

கியாஸ் ஆலையின் அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்ட அதிகாரிகள் கூறும்போது, எந்த ஒரு பெரிய விபத்தாக இருந்தாலும் உடனடியாக அதை கட்டுப்படுத்தும் முழு ஏற்பாடுகளும், பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட விற்பனை அதிகாரி எஸ்.சுகன்யா, மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகர் ராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News