உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட பழனிச்சாமி - வள்ளியம்மாள்.

தம்பதியை கொன்று நகை கொள்ளை - 4 மாதங்களாகியும் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் போலீசார்

Published On 2022-04-16 10:32 GMT   |   Update On 2022-04-16 10:32 GMT
கடந்த 15.12.2021 அன்று பழனிச்சாமியும், அவரது மனைவி வள்ளியம்மாளும் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள  தம்மரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 72). இவரது மனைவி வள்ளி யம்மாள் (68). 

இவர்களது வீடு கணபதிபாளையம் - கீரனூர் சாலையில் அமைந்துள்ளது. வீட்டுக்கு முன்பாக அவர் களுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் 2 பசு மாடுகள் வளர்த்து பால் கறந்து விற்று வந்தனர்.

இவர்களது மகன் சந்திரசேகர் திருமணமாகி திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். மகள் மேகலா திருமணமாகி நத்தக்காடையூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15.12.2021 அன்று பழனிச்சாமியும், அவரது மனைவி வள்ளியம்மாளும் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். 2பேரின் முகம் மற்றும் தலையில் கத்திக்குத்து காயங்களும், நைலான் கயிறு கொண்டு கழுத்து இறுக்கப் பட்ட தடயங்களும் இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய், கைரேகை மூலம் தடயங்களை சேகரித்தனர். வள்ளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போயிருந்தது. இதனால் மர்மநபர்கள் தம்பதியை கொன்று நகையை கொள்ளையடித்து விட்டு சென்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களை பிடிக்க காங்கேயம் டி.எஸ்.பி., குமரேசன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து எஸ்.பி., சசாங் சாய் உத்தர விட்டார். தனிப்படையினர் பழனிச்சாமி வயல் அருகே உள்ள சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். 

மேலும் வயலில் வேலை செய்தவர்கள், பழனிச்சாமி வீட்டிற்கு வந்து சென்ற உறவினர்கள் விவரம் குறித்தும் விசாரணை நடத்தினர். அப்பகுதி யில் உள்ள தொழில் நிறுவனங்களில்  வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். 

இதனால் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது. பழனிச்சாமியும், வள்ளி யம்மாளும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர். அது தொடர்பான பிரச்சினையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது. 

இருப்பினும் இந்த கொலை சம்பவத்தில் 4மாதங்களாகியும் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 
Tags:    

Similar News