செய்திகள்
கலெக்டர் சந்தீப் நந்தூரி

அரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு

Published On 2019-12-11 09:59 GMT   |   Update On 2019-12-11 09:59 GMT
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியுள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடந்து வருகிறது. வருகிற 16-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிகள் ஊரக பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும். கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படும். ஒரு நபர் அதிகபட்சமாக 4 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் கட்சி அளித்த அங்கீகார படிவத்தை ஒப்படைக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கேட்கும் கட்சி சார்ந்த நபர்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆகும். பொதுக்கூட்டம், ஊர்வலம், ஒலிபெருக்கி விளம்பரம் மேற்கொள்ள போலீசாரின் தடையின்மைச்சான்று பெற்று பின்னர் உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும்படை வீதம் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப்பொருட்கள் வழங்கக்கூடாது. இதனை மீறும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட உள்ளார். அரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் ஒருபோதும் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை. தனியார் இடங்களில் ஊரக பகுதியில் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அலுவலர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News