ஆன்மிகம்
இயேசு

உங்கள் குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட ஜெபங்கள்

Published On 2020-11-20 07:51 GMT   |   Update On 2020-11-20 07:51 GMT
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இந்த தேவ வசனங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.
அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்கு ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இந்த தேவ வசனங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். உங்கள் பிள்ளை(கள்) இப்போது உங்கள் வயிற்றில் உள்ளதோ அல்லது வளர்ந்து வருகிறார்களோ, அல்லது வளர்ந்து பெரியவர்களாகி குடும்பம் நடத்தி வருகிறார்களோ எப்படி இருந்தாலும் இந்த வசங்களை வைத்து நீங்கள் அவர்களுக்காக தினமும் ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.

நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார் (எரேமியா 1:5).

என் பிள்ளைகளையும் நீர் கருவிலே தெரிந்து கொண்டதற்காக ஸ்தோத்திரம். என் பிள்ளைகளைப் பரிசுத்தம் பண்ணி அவர்களுக்கு நீர் வைத்துள்ள திட்டத்தை நிறைவேற்றும். ஆமென்.

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங்கீதம் 127: 4-6).

என் கருவில் உருவான பிள்ளைகள் உம்முடைய சுதந்திரம் என்று சொன்னீரே, நன்றி ஐயா. அவர்கள் என் குடும்பத்தில் பலவான்களாக இருப்பார்களாக. அவர்கள் ஒருநாளும் வெட்கப்படாதபடி செய்யும். ஆமென்.

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதிமொழிகள் 22: 6).

என் பிள்ளையை என்னை நம்பி என் கையில் ஒப்புக்கொடுத்தீரே, நன்றி ஐயா. அவனை நல்ல வழியிலே நடத்த நீர் என்னிடம் எதிர்பார்க்கிறீர். நான் நல்ல வழியை அறிந்து, அதில் நடந்து, அவனையும் அதில் நடத்த எனக்கு கிருபைத் தாரும், ஆண்டவரே. ஆமென்.

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை (1 யோவான் 1: 3).

என் பிள்ளைகளை சத்தியத்தில் நடத்த எனக்கு ஞானமும், கிருபையும் கிடைக்க ஜெபிக்கிறேன். நல்ல ஆலயத்தில் எங்களை நாட்டும், உம்முடைய வசனத்தினால் எங்களை போஷியும். உம்மை சந்தோஷப்படுத்தக் கிருபைத் தாரும், ஆமென்.

குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார் (மத்தேயு 21:16).

என் பிள்ளைகளின் வாயில் எப்போதும் துதி இருப்பதாக. அவர்கள் உமக்குப் புதுப் பாடல்களை எழுதுவர்களாக. ஆனந்த துதியுள்ள உதடுகளால் அவர்கள் உம்மை எப்போதும் போற்றுவார்களாக. அவர்கள் இல்லங்களில் எப்போதும் ரட்சிப்பின் கெம்பீர சத்தம் இருப்பதாக. கர்த்தரை எப்படி துதிப்பது என்பதை அவர்கள் என்னிடமும் கற்றுக்கொள்வார்களாக, ஆமென்.
Tags:    

Similar News