ஆன்மிகம்
தூக்க நேர்ச்சை (பழைய படம்)

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை விழா இன்று நடக்கிறது

Published On 2021-03-18 03:02 GMT   |   Update On 2021-03-18 03:02 GMT
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை விழா இன்று நடக்கிறது. கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கும், தூக்கக்காரர்களுக்கும் விதித்து உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று, கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில். இங்கு தூக்கத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தூக்கத்திருவிழா கடந்த 9-ந்தேதி தேவஸ்தான தந்திரி கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான வரலாற்று சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. 1,092 குழந்தைகளின் தூக்க நேர்ச்சைநடைபெறுகிறது. அதற்கு முன் தூக்கக்காரர்கள் குளித்து முடித்துவிட்டு கோவிலுக்கு வந்து கோவிலை சுற்றி முட்டுகுத்தி நமஸ்காரத்தில் ஈடுபடுகின்றனர்.

அதனை தொடர்ந்து அம்மன்கள் இருவரும் கோவில் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் பச்சைபந்தலில் எழுந்தருளுகின்றனர். முதலில் 4 அம்மன் தூக்கம் நடக்கிறது. அதன்பிறகு 1,092 பச்சிளம் குழந்தைகளின் தூக்கக்காரர்கள் தூக்கவில்லில் குழந்தைகளை தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்து குழந்தைகளின் நேர்ச்சை கடனை முடித்து வைக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து தூக்கக்காரர்கள் உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கச்சேரிநடையில் இருந்து ஊர்வலமாக திருவிழா நடைபெறும் கோவிலுக்கு வருகின்றனர். தூக்க நேர்ச்சை தொடர்ச்சியாக நடக்கிறது. கொரோனா காரணமாக கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கும், தூக்கக்காரர்களுக்கும் விதித்து உள்ளனர். கோவில் வளாகத்திற்குள் வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்,

கோவில் வளாகத்திற்குள் கூட்டமாக நிற்க கூடாது, கோவிலில் தரிசனம் முடித்த உடன் கோவிலை விட்டு வெளியேற வேண்டும், மேலும் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை கட்டாயம், மேலும் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தும் தூக்கக்காரர்கள் பாதுகாப்பாக தங்கி இருக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News