செய்திகள்
பாஜக

மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு- ஜனாதிபதி ஆட்சியை தவிர்க்க பா.ஜனதா முயற்சி

Published On 2019-11-04 07:22 GMT   |   Update On 2019-11-04 07:22 GMT
மகாராஷ்டிராவில் தற்போதைய நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
மும்பை:

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது.

மொத்தம் உள்ள 288 இடங்களில் ஆட்சி அமைக்க தேவையான 145 இடங்களுக்கும் அதிகமாக பெற்றதால் அந்த கூட்டணி ஆட்சியில் அமரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாரதிய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சிவசேனா முதல்-மந்திரி பதவியை தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் ஆட்சி அமைவதில் இழுபறி ஏற்பட்டது. அந்த இழுபறி இன்று 12-வது நாளாக நீடிக்கிறது.

சிவசேனாவின் நிபந்தனைகளை பாரதிய ஜனதா ஏற்க திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதையடுத்து சிவசேனா கட்சி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சரத்பவாரை சிவசேனா தலைவர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள்.

இதையடுத்து சரத்பவார் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறார். அப்போது சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக அவர்கள் விவாதித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான பட்னாவிஸ் டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பா.ஜ.க. செயல் தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். அப்போது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அவர்கள் புதிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

சிவசேனாவுக்கு மகாராஷ்டிரா அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை ஒதுக்கவும் மத்திய மந்திரி சபையில் கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்கவும் பா.ஜ.க. முன் வந்துள்ளது. இதை சிவசேனா ஏற்றால் பிரச்சனை முடிவுக்கு வரும். இல்லையெனில் பாரதிய ஜனதா -சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவது சந்தேகம்தான் என்ற நிலை உள்ளது.

சிவசேனா கடந்த 2 நாட்களாக பா.ஜ.க. தலைவர்களுடன் தொடர்பை துண்டித்து விட்டது. அதுமட்டுமின்றி பா.ஜ.க.வை கடுமையாக தாக்கி தகவல்களை வெளியிட்டு வருகிறது. எனவே தன்னிச்சையாக ஆட்சி அமைக்கலாமா? என்று பா.ஜக. தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.


நாளை மறுநாள் கவர்னர் பகத்சிங் கோசி யாரியை முதல்-மந்திரி பட்னாவிஸ் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயார் என்று கடிதம் கொடுப்பார். அதை ஏற்று கவர்னர் பட்னாவிசை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் பதவி காலம் வருகிற 9-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே மகாராஷ்டிராவில் இன்னும் 5 நாட்களுக்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்ற நிர்பந்தமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 5 நாட்களுக்குள் யாரும் பதவி ஏற்காவிட்டால் 10-ந்தேதிக்கு பிறகு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். பா.ஜ.க.வில் ஒருசாரார் மட்டும் மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என்ற நிலையில் உள்ளனர். ஆனால் ஜனாதிபதி ஆட்சி அமைந்தால் அது பாதகமாகி விடக்கூடும் என்ற எண்ணத்தில் புதிய ஆட்சி அமைக்க பட்னாவிஸ் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

நாளை மறுநாள் அவர் கவர்னரை சந்தித்து பேசும்போது 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியலை கவர்னர் கேட்கக்கூடும். அல்லது பட்னாவிசுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து விட்டு பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபியுங்கள் என்று அவகாசம் அளிக்கக்கூடும்.

இந்த இரண்டில் ஏதாவது ஒரு முடிவை கவர்னர் எடுப்பார்.

பட்னாவிசுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்து விட்டு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் பட்னாவிஸ் 2 விதமான சவால்களை சந்திக்க நேரிடும். முதல் சவால் சபாநாயகரை பிரச்சனையின்றி தேர்வு செய்வதாகும். அடுத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டியது இருக்கும்.

6-ந்தேதி கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்து பதவி ஏற்ற பிறகு சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் சிலரை தங்கள் பக்கம் இழுத்து விட முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள். சிவசேனாவை உடைக்கவும் ரகசிய முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இது சிவசேனா தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜ.க. தலைவர்கள் சிவசேனாவை எந்தவிதத்திலும் கண்டு கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சிவசேனாவின் விமர்சனங்களுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பதில் அளிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிவசேனா வி‌ஷயத்தில் எந்த விதத்திலும் அந்த நிபந்தனைகளுக்கு வளைந்து கொடுக்கக்கூடாது என்பதில் மட்டும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உறுதியோடு உள்ளனர்.

இதனால்தான் சிவசேனா தனது பார்வையை காங்கிரஸ் பக்கம் திருப்பி உள்ளது. இன்று சரத்பவாரை சந்தித்து பேசிய பிறகு சோனியா தனது முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று தெரிகிறது. எனவே மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி அமையுமா? அல்லது சிவசேனா தலைமையில் ஆட்சி அமையுமா? என்பது இன்று சோனியா எடுக்கப்போகும் முடிவை பொறுத்து தான் அமையும்.
Tags:    

Similar News