செய்திகள்
அமைச்சர் தங்கமணி

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளாது- தங்கமணி

Published On 2019-11-19 04:15 GMT   |   Update On 2019-11-19 06:12 GMT
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளாது என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டத்துக்குட்பட்ட பரமத்திவேலூரை அடுத்துள்ள சோழசிராமணியையும், ஈரோடு மாவட்டத்துக்குட்பட்ட பாசூரையும் இணைக்கும் வகையில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மின் உற்பத்தி கதவணை பாலத்தின் இணைப்பு சாலையில் 2-வது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. சாலையை சரி செய்யும் பணியை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாசூர் கதவணை பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவு சரிசெய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் எப்போதும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் சாலைகள் சரி செய்யப்படும். மக்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

 


இன்னும் 10 நாட்களில் போக்குவரத்து சரி செய்யப்படும். விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளாது. விவசாயிகளுடன் 10 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். விவசாயிகள், விளை நிலத்துக்கும், தென்னை மரங்களுக்கும் உரிய இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.37,600 இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் முதல்- அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர். அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தலைமை பொறியாளர் தண்டபாணி, உதவி செயற்பொறியாளர் சித்திரபுத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News