செய்திகள்
கோப்புபடம்

பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் - கல்வியாளர்கள் கருத்து

Published On 2021-02-20 12:54 GMT   |   Update On 2021-02-20 12:54 GMT
போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்:

தமிழக பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 3-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும் மாணவர்கள் முழுமையாக கற்றல் மன நிலைக்கு வராத நிலையே தொடர்கிறது. தொடக்க நிலை மதிப்பீட்டுத்தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் குறைவான மதிப்பெண்களே பெறும்நிலை இருக்கிறது.

பாடத்திட்டகுறைப்பை பொறுத்தவரை ஒரு சில பாடங்களுக்கு மட்டும் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.

கணிதம், வணிகவியல் உள்பட முக்கிய பாடங்களில் 80 சதவீதம் வரை பாடங்கள் படிக்க வேண்டிய நிலையுள்ளது. தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ள நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இடையில் மாணவர்களுக்கான கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் செய்முறை தேர்வு காரணமாக 10 முதல் 15 நாட்கள் வரை கற்பித்தல் பணி தடைபடும். மீதமுள்ள நாட்களில் அனைத்து பாடத்திட்டத்தின்படி பாடங்களை நடத்தி முடிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்.

பாடங்களை நடத்தும் போது மாணவர்களுக்கு முழுமையாக புரிய முடியாத நிலை ஏற்படும். மேலும் இதுவரை மாதிரிவினாத்தாள் வினா வங்கி குறித்த எந்த தகவலும் வழங்கப்படவில்லை. காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு எதுவும் நடத்தப்படாமல் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் நிலை உள்ளதால் மாணவர்கள் மன ரீதியாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும் என்பதற்காக மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கூட பொதுத்தேர்வினை ஜூன் மாதத்தில் தான் நடத்துவதாக அறிவித்து உள்ளது. மேலும் குறைந்த கால அவகாசத்தில் மாணவர்களை பொதுத்தேர்வு எழுத நிர்பந்திப்பது அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக குறைந்தபட்சம் 5 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே தற்போது தேர்வினை மே மாத இறுதிக்கு அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News