செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

சேலத்தில் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்

Published On 2021-04-13 04:55 GMT   |   Update On 2021-04-13 04:55 GMT
கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக கொரோனா சித்த மருத்துவ மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.

சேலம்:

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 98 பேருக்கு தொற்று உறுதி ஆனது. சேலம் சுகாதார மாவட்டத்தை சேர்ந்த 31 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேருக்கும், நகராட்சிகளை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 212 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று 16 பேர் குணம் அடைந்த நிலையில் 938 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சேலம் மாநகரில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மாநகராட்சியின் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 மினி கிளினிக் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குடியிருப்பு பகுதிகள், தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 3 லட்சம் பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கிடும் வகையில் பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் 2500 வீதம் 4 மண்டலங்களிலும் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொது இடங்கள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக கொரோனா சித்த மருத்துவ மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.

2-வது அலையில் நோய் தொற்று அறிகுறிகள் மாறி உள்ளன. கழுத்து வலி, இடுப்பு வலி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது போன்றவை அறிகுறிகளாக உள்ளன. இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News