செய்திகள்
திருப்பதி கோவில்

பயங்கரவாதிகள் மிரட்டல் எதிரொலி - திருப்பதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

Published On 2019-10-04 05:29 GMT   |   Update On 2019-10-04 08:16 GMT
பயங்கரவாதிகள் மிரட்டல் எதிரொலி காரணமாக திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநில போலீசார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருமலை:

ஜம்மு- காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு விலக்கிய பிறகு இந்தியாவில் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தென்னிந்தியாவில் முக்கிய நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லிக்குள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையினர் நேற்று எச்சரிக்கை விடுத்தனர். இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலுக்கும் பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளது.



திருப்பதியில் தற்போது நவராத்திரி நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் உச்ச நிகழ்ச்சியான கருட சேவை இன்று இரவு நடக்கிறது.

இதில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதால் திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில போலீசார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 1600 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையை சேர்ந்த 2 குழுவினர் வந்துள்ளனர். இதுதவிர ஆந்திர ஆக்டோபஸ் கமாண்டோ வீரர்கள் 80 பேர் எஸ்.பி. விஷால்குன்னி தலைமையில் துப்பாக்கிகளுடன் திருமலை முழுவதும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இதில் 4 பேர் ஸ்னைப்பர் படையை சேர்ந்த வீரர்கள் அவர்கள் நுண்ணிய பார்வையால் துப்பாக்கியை பயன்படுத்தும் திறன் பெற்றவர்கள்.

4 மாடவீதி மற்றும் உயரமான கட்டிடத்தில் குறிபார்த்து சுடும் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

திருமலை முழுவதும் அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதி கோவில் வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

Tags:    

Similar News