செய்திகள்
லண்டனில் உள்ள சீன தூதரகம்

சிறிய குழு உலகிற்கு ஆணையிட முடியாது- ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா

Published On 2021-06-13 10:15 GMT   |   Update On 2021-06-13 10:15 GMT
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவ, சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
லண்டன்:

சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றியுள்ள நிலையில், பிரிட்டனில் நடக்கும் ஜி7 மாநாடு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, ஜி7 உச்சி மாநாட்டில் சீனாவுக்கு போட்டியாக சில திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை நடத்துகின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவ, சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு ரெயில் பாதைகள், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் கட்ட அவற்றுக்கு பொருளாதார ரீதியாக 
சீனா
 உதவி செய்து வருகிறது. ஆனால், இதனால் சில நாடுகள் அதிக கடன் சுமைக்கு ஆளாகும் சூழல் உருவாவதாக விமர்சிக்கப்படுகிறது. எனவே, அதற்கு போட்டியாகவே ஜி7 தலைவர்கள் புதிய திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். 



புதிய திட்டத்தின் மூலம், கொள்கைகளால் செயல்படும், அதிக தரம் கொண்ட மற்றும் வெளிப்படையான கூட்டாண்மையை தரவுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜி7 மாநாட்டை சீனா பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளது. சில நாடுகள் மட்டுமே கொண்ட சிறிய குழுவானது, உலகளாவிய முடிவுகள் தொடர்பாக ஆணையிட்ட காலம் போய்விட்டது என்று லண்டனில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.


‘நாடுகள் சிறியதோ அல்லது பெரியதோ, வலுவானதோ அல்லது பலவீனமானதோ, எழை நாடோ அல்லது பணக்கார நாடோ... எல்லோரும் சமம். எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். சர்வதேச முடிவுகளை அப்படித்தான் எடுக்க வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News