செய்திகள்
அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை

கொரோனா பரவுவதை தடுக்க விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை

Published On 2021-04-13 17:31 GMT   |   Update On 2021-04-13 17:31 GMT
கொரோனா பரவுவதை தடுக்க விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நோய் பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா நோய் தொற்று முற்றிலும் குறைந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் இந்நோய் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வரும் பொதுமக்களின் நலனை கருதி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலை தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் சித்த மருத்துவ மருந்தான கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அவை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல் சானிடைசர் திரவத்தின் பயன்பாடும் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் பழையபடி மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். அதன்படி முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுபோல் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு அவர்கள் அனைவரும் கட்டாயம் சானிடைசர் திரவத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் நேற்று முதல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சித்த மருத்துவத்துறை சார்பில் கொரோனா பரவலை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News