செய்திகள்
உச்சநீதிமன்றம்

இரண்டு தீர்ப்பாயங்களுக்கு 31 உறுப்பினர்கள் நியமனம்: மத்திய அரசு நடவடிக்கை

Published On 2021-09-12 17:12 GMT   |   Update On 2021-09-12 17:12 GMT
உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டிய நிலையில் இரண்டு தீர்ப்பாயங்களுக்கு 31 உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளது மத்திய அரசு.
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.), வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ஐ.டி.ஏ.டி.) என மத்திய அரசின் பல்வேறு தீர்ப்பாயங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் சுமார் 250 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாததால், இந்த தீர்ப்பாயங்களின் பணிகள் முடங்கியிருந்தன.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தது. மேலும் மத்திய அரசின் மீது குற்றமும் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.), வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ஐ.டி.ஏ.டி.) ஆகிய இரண்டு தீர்ப்பாயங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் என 31 உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் முக்கியமாக என்.சி.எல்.டி.க்கு 8 நீதித்துறை அதிகாரிகள் மற்றும் 10 தொழில்நுட்ப உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி தெலபுரோலு ரஜனி, மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பிரதீப் நார்காரி தேஷ்முக், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரமாதிலகம் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீப் சந்திரா ஜோஷி ஆகியோர் என்.சி.எல்.டி.யின் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற பதிவாளர் ஹர்னம் சிங் தாகூர், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மோகன்ராஜ் மற்றும் வக்கீல் ரோகித் கபூர் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதைப்போல வருமான வரி முதன்மை கமிஷனர் அஜய்தாஸ் மெஹ்ரோத்ரா, பஞ்சாயத்து ராஜ் அமைச்சக ஓய்வுபெற்ற செயலாளர் ராகுல் பிரசாத் பட்நாகர், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொதுமேலாளர் ஸ்ரீபிரகாஷ் சிங் உள்ளிட்டோர் தொழில்நுட்ப உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.இந்த உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது எட்டும்வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பதவியில் இருப்பார்கள்.

ஐ.டி.ஏ.டி.யை பொறுத்தவரை 6 நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் 7 கணக்காளர் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் வக்கீல்கள் சஞ்சோய் சர்மா, சீதாலட்சுமி, டி.ஆர்.செந்தில் குமார், கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதிகள் சதின் கோயல், அனுபவ் சர்மா மற்றும் ஸ்டேட் வங்கியின் சட்ட அதிகாரி மன்மோகன்தாஸ் ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பட்டய கணக்காளர்களான பகிரத் மால் பியானி, பாலகிருஷ்ணன், ஜாமியப்பா தத்தாத்ரேயா பட்டூலி, பத்மாவதி, அருண் கோட்பியா, ரதோட் கமலேஷ் ஜெயந்த் பாய் மற்றும் வருமான வரி கமிஷனர் ரிபோத் தீபக் பாண்டுரங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஐ.டி.ஏ.டி.யில் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்.
Tags:    

Similar News