ஆன்மிகம்
ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவிலில் யானை மற்றும் குதிரை சிலைகள் நிறுவப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவிலில் 80 டன் எடை கொண்ட யானை-குதிரை சிலைகள்

Published On 2021-09-03 06:56 GMT   |   Update On 2021-09-03 06:56 GMT
ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவிலில் ரூ.27 லட்சம் செலவில் 80 டன் எடை கொண்ட கல்லில் யானை மற்றும் குதிரை சிலைகள் நிறுவப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ.3 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதற்காக கோவிலில் யானை மற்றும் குதிரை சிலைகளை வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி கிராமத்தில் யானை மற்றும் குதிரை சிலைகளை ரூ.27 லட்சம் செலவில் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 50 டன் எடையுள்ள கல்லில் யானை சிலையும், 30 டன் எடையுள்ள கல்லில் குதிரை சிலைகளையும் சிற்பிகள் மணிகண்டன், சந்தோஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் செய்து வந்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கிரேன் எந்திரம் மூலம் கனரக லாரியில் சிலைகள் ஏற்றப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவில் வந்தடைந்தது.

கோவிலுக்கு ஒரே கல்லில் செய்யப்பட்டு யானை மற்றும் குதிரை சிலைகள் கொண்டுவரப்பட்டதால் பக்தர்கள், கிராமமக்கள் திரண்டு வந்து வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நேற்று காலை கிரேன் எந்திரம் மூலம் லாரியிலிருந்து சிலைகள் இறக்கப்பட்டு கோவிலில் வைத்து, முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News