செய்திகள்
ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி இன்னும் 1 கோடி பேர் போடாமல் உள்ளனர்- ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2021-10-21 08:38 GMT   |   Update On 2021-10-21 08:38 GMT
முதியவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி போடும்பணியை மேலும் துரிதப்படுத்தி வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:

சென்னை செனாய் நகரில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஷ்யா, இங்கிலாந்தில் கொரோனா மீண்டும் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள்தான் உள்ளது. ஆனாலும் நாம் அரசு சொல்லும் வழிமுறைகளான முககவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.



ஏனென்றால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் இடையே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இன்னும் சவால்கள் உள்ளன. மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை தமிழகத்திற்கு தந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் 53.84 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

ஆனாலும் இன்னும் 1.8 கோடி மக்கள் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அதற்கு அவர்கள் முன்வர வேண்டும். 2-ம் தவணை தடுப்பூசி போடாமல் 57 லட்சம் பேர் உள்ளனர். அவர்களும் தடுப்பூசி போட முன்வர வேண்டும்.

முதியவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி போடும்பணியை மேலும் துரிதப்படுத்தி வருகிறோம். இதற்காக அடிக்கடி மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News