ஆன்மிகம்
சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி சனி பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது

Published On 2020-12-12 08:58 GMT   |   Update On 2020-12-12 08:58 GMT
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி சனி பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. தாணுமாலய சுவாமியும், திருவேங்கட பெருமாளும் கோவிலை சுற்றி தனித்தனி வாகனத்தில் 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்க ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா கடந்த கார்த்திகை 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 15-ந் தேதி வரை விழா நடக்கிறது.

தினமும் காலை 10.30 மணிக்கு மேல் தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனம் சாத்துதலும், சிறப்பு தீபாராதனையும் நடந்து வருகிறது. அதேபோல் மாலை 6.30 மணிக்கு கோவில் முழுவதும் தீப வரிசை ஏற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனையும், பஞ்சாட்சர ஜெப யோகமும் நடந்து வருகிறது.

தினமும் இரவு 7.30 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் தாணுமாலய சுவாமியும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவருமான பெருமாளும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) பிரதோஷம் என்பதால், தினமும் நடைபெறும் மாணிக்க ஸ்ரீபலி விழா முடிந்த பிறகு பிரதோஷ வழிபாடு நடக்கிறது.

இதையொட்டி தாணுமாலய சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தாணுமாலய சுவாமியும், திருவேங்கட பெருமாளும் கோவிலை சுற்றி தனித்தனி வாகனத்தில் 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்த சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்
Tags:    

Similar News