செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தால் ஆன சி.டி.கேசட்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2021-04-18 19:25 GMT   |   Update On 2021-04-18 19:25 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனா். அதன்பிறகு அந்த விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். விமானத்தில் உள்ள கழிவறையில் சி.டி.கேசட் ஒன்று கிடந்தது. வழக்கத்துக்கு மாறாக அது கனமாக இருந்ததால் கேசட்டில் இருந்த கவரை பிரித்து பார்த்தனர்.

அதில் தங்கத்தை சி.டி. கேசட்டாக மாற்றி, அதன் மீது வெள்ளை பெயிண்ட் அடித்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.48 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் விமான நிலைய பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று இருந்த 2 பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் இருந்தது.

சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.65 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அந்த தங்கத்தை கடத்தி வந்த ஆசாமிகள் யாா்? என விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News