செய்திகள்
கமல் ஹாசன்

அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் - கமல் வேண்டுகோள்

Published On 2021-10-23 10:14 GMT   |   Update On 2021-10-23 12:21 GMT
அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களைக் குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் கவலையளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ஏழை, எளிய மக்களின் பசியாற்று மையங்களாகத் திகழ்கின்றன அம்மா உணவகங்கள். மலிவு விலையில் இங்கே வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பன்மடங்கு பெருகியுள்ளது.

திமுக அரசு 'அம்மா உணவகங்களைக் கைவிடும் எண்ணம் இல்லை' என அறிவித்திருந்தது. ஆனால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களைக் குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. மேலும், அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களை திடீரென பணிநீக்கமும், பணியிட மாற்றமும் செய்வதும் நிகழ்கின்றன. 

இந்த நடைமுறை மாற்றங்களுக்கு 'அம்மா உணவகம் நட்டத்தில் இயங்குவதே காரணம்' என்கிறார்கள்.  சிறிய நட்டத்தை காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களைச் சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல.

'அம்மா உணவகத் திட்டம், பெயர் மாற்றப்படாமலேயே சிறப்பாகத் தொடரும்' என்று முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், வரும் செய்திகள் அந்த உறுதிமொழிக்கு எதிரானதாக உள்ளன. அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாகச் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News