லைஃப்ஸ்டைல்
ஆபத்துக்கு அழைப்பு விடுக்கும் முகநூல் மோகம்...

ஆபத்துக்கு அழைப்பு விடுக்கும் முகநூல் மோகம்...

Published On 2021-07-20 03:38 GMT   |   Update On 2021-07-20 03:38 GMT
இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பேராபத்தில் இருந்து தப்பிக்க, முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நன்கு பரிச்சயம் இல்லாதவர்களிடம் நட்பு பாராட்டாமல் இருக்க வேண்டும்.
இன்றைய நாகரிக உலகில் குழந்தைகள் முதல் குடுகுடு வயதானவர்கள் வரை செல்போன் மோகம் தொற்றிக்கொண்டுள்ளது. அதிலும் ஸ்மார்ட் போன் என்றால் சுட்டி குழந்தைகள் கூட தனது சுட்டித் தனத்தை மறந்து செல்போனில் சுணங்கி தான் போகின்றன. முன்பெல்லாம் முகம் பார்த்து பேசி, பழகிய நாம் இன்றைக்கு ‘ஹலோ, ஹாய்’ கூட நேரில் சொல்வது இல்லை. இதை எல்லாம் வாட்ஸ்-அப், பேஸ்-புக்கில் தான் குறுந்தகவலாக அனுப்பி உறவுகளையும், நட்புகளையும் நம்மை நோக்க விடாமல் செல்போனில் முடங்க வைக்கிறோம். ஒரே அறைக்குள் இருந்து கொண்டு முகம் பார்க்காமல் இருக்கும் இதுபோன்ற கலாசாரம் இன்றைக்கு பெண்களை, குறிப்பாக இளம்பெண்களை ஒரு பேராபத்தை நோக்கி அழைத்து சென்று இருக்கிறது.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வையே குறிப்பிடலாம். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரும் ‘பேஸ்புக்’ (முகநூல்) மூலம் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி மாணவியை அந்த இளைஞர் தொடர்பு கொண்டு காரில் முதன்முறையாக அழைத்து சென்றுள்ளார். கார் சிறிது தூரம் சென்றதும், அந்த இளைஞர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை அவருடன் இருந்த நண்பர்களில் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த மாணவியை காரில் இருந்து அவர்கள் இறக்கி விட்டு சென்றனர். இதற்கிடையே மாணவியின் ஆபாச படத்தை வைத்து அவர்கள் 4 பேரும் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது.

நல்லவேளையாக அந்த மாணவி சுதாரித்து கொண்டு தனது பெற்றோரிடம் கூறியதால், தற்போது அவரை மிரட்டிய இளைஞர்கள் சிறையில் கம்பி எண்ணுகின்றனர். அதே நேரத்தில் கைதானவர்களிடம் கேட்ட போது தான், அவர்களின் தலைவனாக செயல்பட்டவன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அவன் வீட்டில் வைத்து தான், வாட்ஸ்-அப், பேஸ்-புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டும் பழகிய, நேரடி பழக்கம் இல்லாத பெண்களை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கொடூரமும் அரங்கேறி உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் வைத்திருந்த செல்போன்களில் 30-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளன. மேலும் ஒரு சில பெண்களை அந்த வீடியோவை காண்பித்து மீண்டும் வர வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற சீரழிவுகளுக்கு காரணம், இணையதள வளர்ச்சி என்று மட்டும் கூறிவிட முடியாது. எந்த வளர்ச்சியிலும் ஆபத்தும் இருக்கும், நல்லதும் இருக்கும். அதேபோல் ஆபத்தை மட்டுமே சுட்டிக்காட்டி அதை புறந்தள்ளி விட முடியாது. சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம் போன்ற சூழலில் இதே சமூகவலைத்தளங்கள் தான் புரட்சிக்கு வித்திட்டன. எனவே செல்போன் ஒரு அழகிய ஆபத்து என்றாலும், இந்த ஆபத்தை தவிர்க்க பெண்களிடமே உபாயம் உள்ளது.

ஆம், அந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற நவீன செல்போன்கள் இல்லாத சூழலில் பெண்களுடன் யாரும் எளிதில் பேசி விட முடியாது. நன்கு பரிச்சயமான உறவுகளிடம் மட்டுமே பெண்கள் பேசுவது வழக்கம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாக படிக்கும் மாணவிகளிடம், சக மாணவர்கள், பெயர் சொல்லி அழைத்து பேசவே ஒரு ஆண்டு காலம் பிடிக்கும். இதில் பல பெண்கள், தங்கள் கல்வியை முடிக்கும் வரை சக மாணவர்களிடம் பேசாமல் தனது படிப்பை முடித்து சென்ற நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு யோசித்து யோசித்து முகம் அறியா நட்பை தவிர்த்ததால், தவறான நட்பால் தடம் மாறுவது என்பது அரிதான ஒன்றாக தான் இருந்தது.

இன்றைக்கு முகநூல், வாட்ஸ்-அப் என்று சமூக வலைத்தளங்களில், யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்று அறியும் முன்பே முகநூலில் அவர்களின் முக அழகை பார்த்து மட்டும் முக நக நட்பு பாராட்டினால் அது நட்பாக இருக்காது. அது நிச்சயம் பேராபத்தில் தான் முடிகிறது. அதிலும் பெண்ணின் அழகு மட்டுமல்ல, ஆணின் அழகும் பெண்ணுக்கு ஆபத்தாக தான் முடிகிறது. முகநூலில் வசீகரிக்கும் அழகுடன் கூடிய இளைஞர்களின் புரோபைல் படங்கள் பல இளம்பெண்களை அவர்கள் பால் ஈர்க்க வைக்கிறது. அவர்களில் பலர் கெட்டவர்களாகவும் உள்ளனர். முகநூலில் நட்பு பாராட்டும் பெண்கள் நாகரிக வளர்ச்சி என்ற உச்சாணி கொம்பில் இதுபோன்ற விபரீதங்களும் உள்ளன என்பதை உணர வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறை பெண்கள் இந்த பேராபத்தில் இருந்து தப்பிக்க, முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நன்கு பரிச்சயம் இல்லாதவர்களிடம் நட்பு பாராட்டாமல் இருக்க வேண்டும். இதை தான் ‘முகநக நட்பது நட்பன்று’ என்று வள்ளுவர் அன்றே நமக்கு உணர்த்தி உள்ளார். பெண்கள் இதை உணர்ந்து செயல்பட்டால் தான் பொள்ளாச்சி சம்பவம் போன்று வேறு சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழாது என்பதை கட்டியம் கூறலாம்.

செல்வவிநாயகன், சேலம்.
Tags:    

Similar News