ஆன்மிகம்
ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவில்

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா?

Published On 2020-12-17 05:12 GMT   |   Update On 2020-12-17 05:12 GMT
ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா? என பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விழாவிற்கு சில நாட்களே உள்ளதால் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சந்தவாசல் அருகே உள்ள ஏரிக்குப்பம் கிராமத்தில் யந்திர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. எந்திர வடிவில் சனீஸ்வர பகவான் நிறுவப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் வழிபடுவர். வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

எனவே வருகிற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடத்த அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில், “சனிப்பெயர்ச்சி விழா நடத்துவது தொடர்பாக கலெக்டரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளோம். இது தொடர்பாக வருகிற வெள்ளிக்கிழமை (அதாவது நாளை), கோவில் உதவி ஆணையருடன் நேரில் சந்திக்க அனுமதி வழங்கியுள்ளார்” என்றார்.

அவ்வாறு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டி உள்ளது. இந்த ஊரில் இந்த கோவிலுக்கு மேற்கே உள்ள ஏரியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் அதிகமாக நிரம்பியுள்ளது. இதனால் ஏரியிலிருந்து இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இதனை சரி செய்து கழிப்பறை, குடிநீர், சாலை, போக்குவரத்து வசதிகள் செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News