செய்திகள்
கோப்புப்படம்

ராமநாதபுரம் சூப்பிரண்டு அலுவலகத்தில் 37 போலீசாருக்கு கொரோனா

Published On 2021-05-18 02:11 GMT   |   Update On 2021-05-18 02:11 GMT
ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 37 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

மாவட்ட காவல் அலுவலகம், தனிப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, நிலமோசடி தடுப்பு பிரிவு, குற்ற ஆவண காப்பக பிரிவு, நெடுஞ்சாலை ரோந்து கண்காணிப்பு பிரிவு, சைபர் கிரைம் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு போலீசாருக்கும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வந்த குழுவினர் அனைவருக்கும் சளி பரிசோதனை செய்தனர். மொத்தம் 72 போலீசாருக்கு நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் முடிவுகள் நேற்று தெரிவிக்கப்பட்டன.

இந்த 72 பேரில் 37 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 37 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் அறிகுறி இல்லாததால் அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறி உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

37 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நேற்று காலை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையே ராமநாதபுரம் சைபர்கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Tags:    

Similar News