செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

‘அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார், டிரம்ப்’ - அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Published On 2019-12-05 01:19 GMT   |   Update On 2019-12-05 01:19 GMT
தனது அரசியல் எதிரி ஜோ பிடெனுக்கு எதிராக விசாரணை நடத்த டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதை செய்யாவிட்டால் உக்ரைனுக்கு தருகிற பயங்கரவாத ஒழிப்பு நிதியை நிறுத்திவிடுவோம் என அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஜனாதிபதி டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் தொடங்கினர்.

ஒரு மாதத்துக்கும் மேலாக நாடாளுமன்ற புலனாய்வு குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக ஜோ பிடென் மீது விசாரணை நடத்துவது தொடர்பாக உக்ரைனில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் டிரம்ப் பேசியது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் அமெரிக்க தூதர்கள் 2 பேர் டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

இந்த நிலையில் டிரம்ப் சொந்த லாபத்துக்காக தனது அதிகாரத்தை பயன்படுத்தினாரா என்பது குறித்து நாடாளுமன்ற புலனாய்வு குழு அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியது.

நேற்று முன்தினம் இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஆஜராகும்படி டிரம்புக்கு நாடாளுமன்ற புலனாய்வு குழு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லை என கூறி டிரம்ப் விசாரணைக்கு ஆஜராக மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் பதவி நீக்க விசாரணையை நடத்தி வரும் நாடாளுமன்ற புலனாய்வு குழு 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:-

தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது விசாரணையை அறிவிக்க உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன.

அத்துடன் 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது ரஷியா அல்ல; உக்ரைன்தான் என்ற சதி கருத்து ஒழித்து கட்டப்படுகிறது. மேலும் பதவி நீக்க விசாரணையை தடுக்க டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதையும் விசாரணை முடிவு செய்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நாடாளுமன்ற புலனாய்வு குழுவின் அறிக்கையை வெள்ளை மாளிகை புறக்கணித்துள்ளது. மேலும் இது முற்றிலும் பொய்யான அறிக்கை என சாடியது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீபனி கிரிஷாம் கூறுகையில், “நாடாளுமன்ற புலனாய்வு குழு மற்றும் ஜனநாயக கட்சியினர் டிரம்பின் தவறுக்கான எந்த ஆதாரத்தையும் வழங்க முற்றிலும் தவறிவிட்டனர்” என கூறினார். 
Tags:    

Similar News