லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....

Published On 2020-10-22 02:12 GMT   |   Update On 2020-10-22 02:12 GMT
சோம்பேறித்தனத்தாலோ, வேலைப்பளுவாலோ உடற்பயிற்சியை தவிர்த்து வந்தால் அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துவிடும்.
உடல் தசைகளின் இயக்கத்திற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி இன்றியமையாதது. உடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

சோம்பேறித்தனத்தாலோ, வேலைப்பளுவாலோ உடற்பயிற்சியை தவிர்த்துவந்தால் அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துவிடும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குவது நல்லது. போதுமான அளவு உடற்பயிற்சி செய்யாவிட்டால் தசைகள் பாதிப்புக்குள்ளாகும். ஏனெனில் தசைகளுக்குத்தான் உடற்பயிற்சி அவசியமானது. உடற்பயிற்சியை தவிர்க்கும் பட்சத்தில் தசைகள் வலிமையை இழந்துவிடும்.

மன அழுத்தத்திற்கும், உடற்பயிற்சிக்கும் தொடர்பு இருக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் விடுபட்டுவிடலாம். உடற்பயிற்சி செய்யாத நாட்களில் மன அழுத்தம் ஏற்பட்டால் அதில் இருந்து விடுபடுவது கடினமாகிவிடும். மன அழுத்தத்தை விரட்டும் சிறந்த வழிமுறைகளில் ஒன்றாக உடற்பயிற்சி அமைந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்துவந்தால் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலும், மனமும் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் செயல்படும். உடற்பயிற்சியை தவிர்த்து வந்தால் உடல் சோர்வாக இருக்கும். மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும் உடற்பயிற்சி துணைபுரியும்.

உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. உடற்பயிற்சியை தொடர்ந்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதையும், தவிர்த்துவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதையும் உணர்வுப்பூர்வமாக உணரலாம். மேலும் உடற்பயிற்சியை தவிர்த்துவந்தால் தூக்கமின்மை பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். நல்ல தூக்கத்தை உறுதி செய்யும் தன்மை உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத பட்சத்தில் நடைப்பயிற்சியாவது கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News