செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்... கண்காணிப்பு குழு முடிவு செய்யலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்

Published On 2021-10-25 17:17 GMT   |   Update On 2021-10-25 17:32 GMT
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அணையை ஒட்டி உள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்களுக்கு ஆபத்து இருப்பதாக மனுதாரர்களின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. கேரள மாநில எல்லையில் இருந்தாலும், அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. ஆனால் இந்த அணை விவகாரத்தில், தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை, மிகவும் பழமையான அணை என்பதால், மொத்த  உயரமான 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். இடுக்கி உட்பட 5 மாவட்டங்கள் முழுவதும் அழிந்து விடும் என கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையில் 142 அடி நீரை தேக்கிவைக்கலாம் என உத்தரவிட்டது. 

சமீபத்தில்கூட முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது

இதற்கிடையே, கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 137 அடியை தாண்டியது. எனவே, அணையின் பாதுகாப்பு மற்றும் கேரள மக்களின் நலன் கருதி தமிழகம் கூடுதலாக தண்ணீரை திறந்துவிடவேண்டும் என கேரள அரசு கூறி உள்ளது. 

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. கனமழை நீடிப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக அணையை ஒட்டி உள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் மனுதாரர்களின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் 2018ல் உத்தரவிட்டபடி, 139 அடி உயரத்துக்கு மேல் நீர் மட்டத்தை உயர்த்தக்  கூடாது என்று கேரள அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.2 அடியாக இருந்தது என தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அணையின் நீர்மட்டத்தை எத்தனை அடி வரை உயர்த்தலாம் என்பது குறித்து கண்காணிப்புக்குழு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

‘இந்த விஷயத்தில் ஒவ்வொருவரும் தீவிரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். இது மக்களின் உயிர் தொடர்புடைய விஷயம். சிலரது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும். அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும். இது நீங்கள் விவாதிக்கக்கூடிய அரசியல் களம் அல்ல. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் கேரள அதிகாரிகள் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News