செய்திகள்
கர்நாடக சட்டசபை

கர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திருத்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது

Published On 2020-09-27 00:35 GMT   |   Update On 2020-09-27 00:35 GMT
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக சட்டசபையில் நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேறியது.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று சட்டசபையில் மாநில அரசு நில சீர்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. அதன் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 
மேலும், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே சட்டசபையில், நில சீர்திருத்த மசோதா நிறைவேறியது. இதைதொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், வரும் 28-ம் தேதி முழுஅடைப்புக்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த நில சீர்திருத்த சட்ட திருத்தம் மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது சட்டசபையில் நேற்று கூட்டுறவுத் துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

அந்த மசோதா மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது, “இந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது. அவர்கள் இதுவரை தங்களின் விளைபொருட்களை வேளாண் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். அங்கு அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. இந்த சட்ட திருத்தம் மூலம், தனியார் நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த நிறுவனங்கள் விளைபொருட்களை வாங்கி பதுக்க முடியும். விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காது“ என்றார்.

இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மந்திரி எஸ்.டி.சோமசேகர், “இந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். இதனால் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அவர்களால் அதிக லாபம் ஈட்ட முடியும். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இது விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ஆதார விலை நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். அதனால் விவசாயிகள் பயப்பட தேவை இல்லை“ என்றார்.

மந்திரியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே அந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
Tags:    

Similar News