செய்திகள்
கைதான அருண்பிரகாஷ்

ரூ.1½ கோடி மோசடி: கோவை தங்கம் மருமகன் ஜெயிலில் அடைப்பு

Published On 2021-10-20 03:52 GMT   |   Update On 2021-10-20 03:52 GMT
ரூ.1½ கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை சாய்பாபா காலனி கணபதி லேஅவுட்டைச் சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (வயது 41). இவர் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் ஆவார்.

அருண்பிரகாஷ் ரியல் எஸ்டேட், ஓட்டல் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.

இவரும், பீளமேடு சிட்ரா சசிஅவென்யூ பகுதியைச் சேர்ந்த சிந்துஜாவும் சேர்ந்து புதிய தொழில் தொடங்க திட்டமிட்டனர். இதனை சிந்துஜா தனது தந்தை செங்குட்டுவனிடம் தெரிவித்தார். அவரும் அருண்பிரகாசை நம்பி, ரூ.1½ கோடி கொடுத்துள்ளார்.

ஆனால் அருண்பிரகாஷ் புதிய தொழிலும் தொடங்கவில்லை, செங்குட்டுவனிடம் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அருண்பிரகாஷ் தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக கூறி கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் செங்குட்டுவன், புகார் செய்தார்.

அந்த புகாரில் அருண்பிரகாஷ் தன்னிடம் ரூ.1½ கோடி வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது வால்பாறையில் தேயிலை எஸ்டேட்டை விற்று பணத்தை தருவதாக கூறினார். மேலும் 2 காசோலைகளை கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. எனவே பணத்தை தராமல் ஏமாற்றிய அருண்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் அருண்பிரகாஷ் மீது மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் நேற்று அருண்பிரகாசை போலீசார் கைது செய்தனர். கோவை 7-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி பிரபு முன்னிலையில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அருண்பிரகாசை நவம்பர் 3-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அவினாசியில் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அருண்பிரகாஷ் மீது சிந்துஜா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் ஏற்கனவே ஒரு புகார் கொடுத்திருந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த தன்னிடம் ஓட்டல் தொழில் தொடங்கலாம் என கூறி ரூ.7 கோடியை ஏமாற்றி விட்டதாகவும், இதுதொடர்பான பிரச்சனையில் வீடு புகுந்து தனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இருந்தார்.

அந்த புகார் தொடர்பாக அருண்பிரகாஷ் மீது தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி அருண்பிரகாஷ், போலீஸ்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்தநிலையில் சிந்துஜாவின் தந்தை அளித்த புகாரில் தற்போது போலீசாரால் அருண்பிரகாஷ் கைதாகி உள்ளார்.
Tags:    

Similar News