செய்திகள்
நகை பறிப்பு

காங்கேயம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2020-09-15 13:56 GMT   |   Update On 2020-09-15 13:56 GMT
காங்கேயம் அருகே உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் நகையை பறித்து கொண்டு 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம்:

காங்கேயம் அருகே உள்ள செம்மங்காளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி (வயது 45) விவசாயி. இவருடைய மனைவி பத்மாவதி (40). இவர் நேற்றுகாலை ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு உறவினர்களை பார்த்து நலம் விசாரித்த பின்னர் செம்மங்காளிபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தார். பாப்பினி அருகே வந்த போது மாலை 4 மணியளவில் அங்குள்ள ஒரு செடிகள் நாற்று பண்ணை முன்பு தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பண்ணையில் சென்று தனக்கு தேவையான சில செடிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது காங்கேயத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பத்மாவதியை வழிமறித்து அவரை தள்ளி விட்டு பத்மாவதி அணிந்திருந்த தாலிக்கொடியை பறிக்க முயற்சித்தனர். அவர் பதட்டம் அடைந்து என்ன செய்வது என தடுமாறிய போது 7½ பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

பத்மாவதி சத்தம் போட்டதால் அருகில் இருந்து வந்த பொதுமக்கள் துரத்திச்சென்றும் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை பிடிக்க முடியவில்லை. இது குறித்து பத்மாவதி காங்கேயம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் காங்கேயம் -முத்தூர் செல்லும் இந்த பிரதான சாலையில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News