செய்திகள்
கொரோனா வைரஸ்

குமரி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா

Published On 2020-10-23 08:42 GMT   |   Update On 2020-10-23 08:42 GMT
குமரி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகர்கோவில்:

குமரியில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக 50-க்கும் குறைவாக பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது.

இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் அவருக்கு சுகாதார பணியாளர்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் வருவாய் அதிகாரியின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே சமயத்தில், வருவாய் அதிகாரி ரேவதியுடன் பணியாற்றிய அரசு அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் என பலருக்கும் சளி பரிசோதனை எடுக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

இதேபோல் நாகர்கோவில் ஆயுதப்படையில் பணியாற்றும் 2 போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரியில் நேற்று சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மற்றும் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 285 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.57 ஆயிரத்து 600 வசூலானது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 353 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 761 பேர் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News