செய்திகள்
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் (கோப்பு படம்)

பிரிக்ஸ் மாநாடு நாளை தொடக்கம் - பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2020-11-16 12:29 GMT   |   Update On 2020-11-16 12:32 GMT
5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
புதுடெல்லி:

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

2019-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 11-வது மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்றது.

இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் 12-வது மாநாடு இந்த ஆண்டு ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான மாநாடு காணொலி காட்சி மூலம் நாளை (நவம்பர் 17) நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டில், உலக நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி தொடர்பான தலைப்புகளில் விவாதம் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கொரோனா வைரஸ், பயங்கரவாத தடுப்பு, வர்த்தகம், சுகாதாரம், மின்சக்தி, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் விவாதம் நடைபெற உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News