செய்திகள்
மரைன் கமாண்டோஸ் (கோப்பு படம்)

லடாக் எல்லையில் களமிறக்கப்படும் இந்திய கடற்படையின் சிறப்பு கமாண்டோ பிரிவினர்...

Published On 2020-11-28 11:33 GMT   |   Update On 2020-11-28 11:33 GMT
இந்திய கடற்படையின் சிறப்பு கமாண்டோ பிரிவினர் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லடாக்:

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளன.

போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்ற போது இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளது. இதனால், இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால் இந்திய ராணுவத்தின் சிறப்பு படையினரும், விமானப்படையின் சிறப்பு பிரிவினரும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் இந்திய கடற்படையின் சிறப்பு பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். கடற்படையின் சிறப்பு பிரிவான மரைன் கமாண்டோஸ் (மார்க்கோஸ்) வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

லடாக்கின் மேற்கு பகுதியில் உள்ள பங்காங் ஏரிக்கரை பகுதியில் கடற்படையின் சிறப்பு பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையிலும், லடாக்கின் சீதோஷன நிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News