செய்திகள்
பிரியங்கா காந்தி

2 விவசாயிகள் தற்கொலை: உ.பி. முதல்-மந்திரி மீது பிரியங்கா பாய்ச்சல்

Published On 2019-10-10 07:55 GMT   |   Update On 2019-10-10 07:55 GMT
விவசாய கடன் தள்ளுபடி என்று கூறி அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி மீது பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சனை பூதாகரமாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 விவசாயிகள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

மஹோபா மற்றும் ஹமீர்பூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்தனர். இந்த செய்தியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளை துன்புறுத்துவதற்கு முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது. விவசாய கடன் தள்ளுபடி என்று கூறி இந்த அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது.


மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வுகாண ஆளும் பா.ஜனதா அரசு முயற்சிக்கவில்லை. வெறும் விளம்பரங்களில் மட்டும் விவசாயிகளை நினைவுபடுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். மாநில தலைவர் ராஜ்பப்பர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஜய் குமார் லல்லு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல 4 துணை தலைவர்கள், 12 செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உ.பி. காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. இதன் காரணமாகவே பிரியங்கா தற்போது உ.பி. விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.

அவர் வருகிற 14-ந்தேதி உத்தரபிரதேசம் சென்று புதிய காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

Tags:    

Similar News