செய்திகள்
பாலாறு அணைக்கட்டில் சீறிப்பாய்ந்து செல்லும் வெள்ளம்.

வேலூர், ராணிப்பேட்டை பாலாற்றில் வெள்ளம் குறைகிறது

Published On 2021-11-22 09:00 GMT   |   Update On 2021-11-22 09:00 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 369 ஏரிகளில் 265 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூர்:

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை சற்று ஓய்ந்ததுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.

வட கிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது.

இதேபோல் ஆந்திராவில் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், பொன்னை ஆற்றில் அதிகபட்சமாக விநாடிக்கு சுமார் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பொன்னை ஆற்றின் இரு கரையை தொட்டபடி பாலாற்றில் கலந்தது.

இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்று வரலாற்றில் 1903-ம் ஆண்டுக்கு பிறகு 118 ஆண்டுகள் கழித்து விநாடிக்கு சுமார் 1 லட்சத்து,40 ஆயிரத்து 54 கன அடி வெள்ளநீர் பெருக்கெடுத்து இரு கரையையும் தொட்டபடி சீறிப்பாய்ந்தோடியது. வரலாறு காணாத வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கண்டுகளித்தனர்.

தற்போது பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை பாலாற்றில் 48 ஆயிரம் கனஅடி வெள்ளம் வந்தது. பொன்னை ஆற்றில் 11,687 கனஅடியாக குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, வாலாஜா அணைக்கட்டு நீர்த் தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 51,593 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 369 ஏரிகளில் 265 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

காவேரிப்பாக்கம், கலவை, பூண்டி, மகேந்திரவாடி, மூதூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News