வழிபாடு
அக்னி சட்டி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

பெரியமாரியம்மன் கோவில் திருவிழா: அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2022-03-26 06:50 GMT   |   Update On 2022-03-26 06:50 GMT
பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலின் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 19-ந்தேதி இரவு 10 மணிக்கு பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது.

இந்த கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். அதன்படி நேற்றும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

கடந்த 23-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தியும், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடந்தது. வருகிற 29-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

31-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கிலும், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், இரவு 9 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கிலும் வீதி உலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News