செய்திகள்
கலெக்டர் கண்ணன்

வெளிநாடு, மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு அவசியம் - கலெக்டர் கண்ணன் தகவல்

Published On 2021-04-09 02:28 GMT   |   Update On 2021-04-09 02:28 GMT
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் மாத இறுதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு அவசியம் என கலெக்டர் கண்ணன் கூறினார்.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன்அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் மாத இறுதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைபடி எவ்விதமான தளர்வுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. மொத்த வியாபார காய்கறி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது தொழிற்சாலைகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுவதையும், விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

வணிக வளாகங்கள் மற்றும் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம். ஓட்டல்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதத்தில் மட்டும் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும். ஆனால் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும். விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி போட்டிகள் நடத்தலாம். நீச்சல் குளங்களில் பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் அதன் சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி இல்லை.

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மாவட்டத்திற்கு வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவுமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். நோய்த்தொற்றை குறைக்கும் பொருட்டு ஏற்கனவே உள்ளபடி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அதில்தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News