செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

திடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா?

Published On 2019-11-12 07:06 GMT   |   Update On 2019-11-12 07:07 GMT
நுன்சாக் மூலம் ஒருவர் டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் நபர் ஒருவர் நுன்சாக் மூலம் டேபிள் டென்னிஸ் விளையாடும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. கருப்பு வெள்ளை நிறத்தில் ஓடும் வைரல் வீடியோவினை ஃபேஸ்புக்கில் பலர் பகிர்ந்து வருகின்றனர். 

வீடியோவில் நுன்சாக் கொண்டு டேபிள் டென்னிஸ் விளையாடுவது பிரபல தற்காப்பு கலை வல்லுநரான புரூஸ் லீ என குறிப்பிட்டு இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. 1970களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், இது மிகவும் அரிதான வீடியோ என்றும் கூறிவருகின்றனர். 

ஆய்வில் வைரல் வீடியோவில் நுன்சாக் கொண்டு டேபிள் டென்னிஸ் விளையாடுவது புரூஸ் லீ இல்லை என தெரியவந்துள்ளது. இந்த வீடியோவினை விளம்பர நிறுவனம் ஒன்று டிஜிட்டல் முறையில் உருவாக்கி இருக்கிறது. உண்மையில் இந்த வீடியோ 2008 ஆம் ஆண்டு வெளியான நோக்கியா என்96 லிமிட்டெட் எடிஷன் புரூஸ் லீ செல்போனை விளம்பரப்படுத்த உருவாக்கப்பட்டதாகும்.



1.12 நிமிடங்கள் ஓடும் வைரல் வீடியோ ஃபேஸ்புக்கில் சில ஆண்டுகளாக வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தான் என பகிர்ந்து வருகின்றனர். வீடியோ கருப்பு வெள்ளை நிறத்தில் இருப்பதால், அது 1970களில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என பலர் நம்பியதாக கூறப்படுகிறது.

புரூஸ் லீ 1973 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த வகையில் இந்த வீடியோ புரூஸ் லீ மரணித்து 35 ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நுன்சாக் பயன்படுத்தியவர் பார்க்க புரூஸ் லீ போன்று காட்சியளித்ததும் வீடியோ வைரலாக காரணமாக பார்க்கப்படுகிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News