செய்திகள்
போராட்டம்

போராட்டம் நடத்தியதால் ஆத்திரம் - வியாபாரியை அழைத்து சென்று தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2019-09-17 09:45 GMT   |   Update On 2019-09-17 09:45 GMT
திண்டுக்கல் அருகே போராட்டம் நடத்தியதால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வியாபாரியை அழைத்த சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செந்துறையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறியதாக அழகு பாண்டி (வயது 30), முருகன் (39), தண்டபாணி (25), சக்திவேல் (35), செல்வகுமார் (40), ராஜப்பன் (35), வடிவேல் (40) உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதைதொடர்ந்து அப்போது அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் மற்றும் போலீசார் நள்ளிரவில் வீடு புகுந்து 7 பேரையும் கைது செய்தனர். அவர்களை காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். செல்வக்குமாரை கைது செய்ய வந்தபோது அதனை தட்டிகேட்ட அவரது தந்தை ராஜேந்திரனை துப்பாக்கி கொண்டு தாக்கியதில் படுகாயம் அடைந்து செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் மற்றும் கடை அடைப்பு, மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரூரல் துணை கண்காணிப்பாளர் வினோத் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்தவர்களை விடுவிப்பதாக கூறியதையடுத்து 3 மணி நேரமாக நடைபெற்ற சாலைமறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

இதனிடையே மறியலுக்கு பின்னர் செல்வக்குமாரை மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சக போலீசார் முன்னிலையில் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் செல்வக் குமாருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதை அறிந்த செல்வக்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர். இதுபற்றி அவரது தந்தை ராஜேந்திரன் கூறுகையில்,

சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போராட்டம் நடத்திய காரணத்துக்காக எனது மகனை மீண்டும் அழைத்து சென்று தாக்கியுள்ளார். மேலும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக பொய்யான சான்றிதழ் வாங்கியுள்ளனர். எந்த குற்றமும் செய்யாத எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். இதுபற்றி வக்கீல் களை கலந்து சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம் என்றனர்.

உரிய தீர்வு கிடைக்காவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
Tags:    

Similar News