செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட ஜப்பான்

ஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் - பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

Published On 2019-10-16 12:05 GMT   |   Update On 2019-10-16 12:05 GMT
ஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
டோக்கியோ:

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த புயல் கரையை கடந்த போதிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் மழையால் போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக 5 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும், பல பகுதிகளில் 100-க்கும் அதிகமான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

தற்போது புயல் கரையை கடந்துவிட்டதால் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், ஹகிபிஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த புயல் காரணமாக 11 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 
இதற்கிடையில், ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க முதல் கட்டமாக 6.5 டாலர்களை நிதியாக ஒதுக்கியுள்ளார்.
Tags:    

Similar News