செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

நாளை மே தினம்: எடப்பாடி பழனிசாமி- தலைவர்கள் வாழ்த்து

Published On 2021-04-30 07:18 GMT   |   Update On 2021-04-30 07:18 GMT
நாளை மே தினம் கொண்டாடப்படுவதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-

உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் உன்னத தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே தினம் கொண்டாடப்படுகிறது.

தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

உரிமைகளுக்காக போராடி வென்ற உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றும் மே தினத்தில், ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் உழைப்பாளர்களை நன்றியோடு வாழ்த்துகிறேன்.

எப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டாலும் நம்முடைய உணவுக்காக, சுகாதாரத்திற்காக, உயிருக்காக, மீட்சிக்காக உழைக்கிற அத்தனை பேரையும் போற்றிட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உழைப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் தடையின்றி கொடுக்கிற சமூகமும், அரசாங்கமுமே சிறந்ததாக திகழ முடியும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. உலகை இயங்க வைக்கும் பாட்டாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உலகத்திற்கு உள்ளது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்கும் லட்சிய பயணத்தின் தொடக்கமாக நடப்பாண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும் என்று மீண்டும் ஒரு முறை உளமாற வாழ்த்துகிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

செல்வங்களுக்கு எல்லாம் பெரும் செல்வம் என்று கொண்டாடப்படும் மக்கள் செல்வத்தை கூடக் கட்டுப்படுத்த முனைகின்ற காலகட்டத்தில், ஒவ்வொருவரும் உழைப்பதற்காக பத்து விரல்களைப் பெற்றுள்ளோம். அந்த பத்து விரல்களும் இணைந்து செயல்பட்டால்தான் ஒரு செயலை செய்து முடிக்க முடியும். அதைப்போல, உழைப்பாளர்கள் ஒன்று பட்டு நின்றால்தான், உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் நலன் கருதி, நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கினை அறிந்து, அவர்களுடைய பல நீண்டகால கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கனிவோடு பரிசீலனை செய்து தொழிலாளர் தோழர்களுக்கு உதவ வேண்டும் என்று இந்த நல்ல நாளில் கேட்டுக்கொள்கிறேன். தொழிலாள தோழர்கள் அனைவருக்கும் என் இனிய மே தின நல்வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ்:-

உலகம் முழுவதுமே புதிய பொருளாதார கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்களுக்கு இருந்த அதிகாரங்களும், உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டன. உரிமைகளைக் கோராத வரையில் தான் உழைப்பாளர்கள் பணியில் இருக்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் பணியை இழக்க வேண்டியது தான் என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். உழைக்கும் வர்க்கத்திற்கு உயர்வு கிடைக்க வேண்டும். உரிமைகள் கிடைக்க வேண்டும்.

புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

சுய நலமில்லாது, பொதுநலம் கருதி, இரவு, பகல் என்று பாராமல், மழை, வெயில் என்று நினைக்காமல், ஓய்வென்பதே அறியாமல் உழைப்பு, உழைப்பு என்னும் ஒற்றை வார்த்தையையே தாரக மந்திரமாக உச்சரித்தும், பாடுபடும் தொழிலாளர்களை நன்றியுடன் போற்றுவோம். மனதார வாழ்த்துவோம். அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கும் மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பும் ஈடு இணையில்லாதது. ஒரு காலத்தில் கொத்தடிமைகளாக இருந்த இந்த தொழிலாளர்கள் தங்களை தாங்களே விடு வித்துக் கொண்டு மீண்டும் சுதந்திர காற்றை சுவாசித்த நாளையே நாம் மே தினமாக கொண்டாடுகிறோம்.

இயேசு அழைக்கிறார் நிறுவனர் பால் தினகரன்:- உழைப்பின் உயர்வையும், மேன்மையையும், நல்லுல கிற்கு எடுத்துச் சொல்லும் இம் மே தின நன்னாளில் அயராது உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வு ஏற்றம் பெறவும், தொழிற் வளத்தில் சிறந்து, நாடு தொழில்நுட்பத்தில் தன்னிகர் பெற்று, தலைநிமிர்ந்து நிற்கவும் இதயபூர்வமாய் வாழ்த்துகிறேன்.

Tags:    

Similar News