உலகம்
தடுப்பூசி போடும் பணி

கொரோனா தடுப்பூசியின் 4-வது டோஸ் செலுத்த இஸ்ரேல் திட்டம்

Published On 2021-12-22 15:57 GMT   |   Update On 2021-12-22 15:57 GMT
நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது, ஒமைக்ரான் வைரசால் ஏற்படும் அடுத்த அலையை சமாளிக்க உதவும் என்று பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்:

கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா பரவுவதால் பூஸ்டர் தடுப்பூசியை (3-வது டோஸ்) பல்வேறு நாடுகள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேல் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியின் 4-வது டோசை செலுத்த திட்டமிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பைசர்-பயோன்டெக் தடுப்பூசியின் 4-வது டோசை செலுத்தலாம் என வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்ததும் விரைவில் 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.

இந்த நடவடிக்கையை பிரதமர் நஃப்தலி பென்னட் வரவேற்றுள்ளார். இது, ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் அடுத்த அலையை சமாளிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

புதிய வகை உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் வைரசால் பல நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டில் 341 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News